பெங்களூருவில் தனது கள்ளக்காதல் விவகாரத்தைக் கேள்வி கேட்ட இரண்டு சிறுவர்களை இரும்புக்கம்பியால் தாக்கியதாக, பெங்களூரு வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆனந்த் நாயுடு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதாவது காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தந்தை புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது, காங்கிரஸ் பிரமுகர் ஆனந்த் நாயுடுவுக்கும், புகார்தாரரின் மனைவிக்கும் இடையே கடந்த 3-4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து புகார்தாரரின் இரண்டு மகன்களும் (சிறுவர்கள்) ஆனந்த் நாயுடுவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் நாயுடு, சிறுவர்களை இரும்புக்கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் சிறுவர்களின் கை, கால் மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  மேலும், தனது சம்மதம் இல்லாமலேயே தனது சொத்துக்களை ஆனந்த் நாயுடுவும், தனது மனைவியும் சேர்ந்து முறைகேடாக மாற்றிவிட்டதாகவும் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தையின் புகாரைத் தொடர்ந்து,  போலீசார் ஆனந்த் நாயுடு மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரே சிறுவர்களைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ள சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.