சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (12) என்ற சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஸ்வரிக்கு 4 வயதாக இருந்தபோதே இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். முதலில் உடலில் செதில்கள் தோன்றிய நிலையில், அவை காலப்போக்கில் மரப்பட்டை போன்ற கடின தன்மையை எடுத்து, தற்போது கல் போல் உறைந்து வருகிறது. இந்த பாதிப்பு முதலில் கைகளில் தொடங்கி, பின்னர் படிப்படியாக உடல் முழுவதும் பரவியுள்ளது.

இந்த நோயின் காரணமாக, சிறுமி வெளியில் யாரையும் சந்திக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். நாளுக்கு நாள் உடல் நிலையும், மனநிலையும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போதும், இதுவரை எந்த நிரந்தர தீர்வும் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். பரிசோதனைகளின் அடிப்படையில், ராஜேஸ்வரிக்கு ‘இக்தியோசிஸ் ஹிஸ்ட்ரிக்ஸ்’ (Ichthyosis Hystrix) எனப்படும் அரிய மரபணு தோல் நோய் இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த நோய் உலகளவில் மிகவும் அரிதானது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொற்று நோய் அல்ல; தற்போது இதற்கென நிரந்தர சிகிச்சை இல்லை. இருப்பினும், தினசரி மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது மூலம் நோயின் தீவிரத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.