உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால் உயிர் பிழைக்கிறார்கள். சமீபகாலமாகவே இந்தியாவில் நாளுக்கு நாள் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்தவகையில்  நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 8ஆம் வகுப்பு மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது மாணவன் சுருண்டு விழுந்தான். அப்போது உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மயக்கமாக இருந்த போது தண்ணீர் கொடுக்கப்பட்டதாகவும், ஆனாலும் மாணவன் உடல் அசைவின்றி கிடந்ததாக போலீசாரிடம் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.