வீரர்களை விளையாட்டில் அச்சமின்றி இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், இந்த வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா தனது முதல் டி20 தொடரை வென்றது. நேற்று டிசம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20யில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு தோற்கடிக்கப்படாத 14வது தொடர் இதுவாகும். கடைசியாக 2019ல் தொடரை இழந்தது.

4வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

இந்திய அணியில் ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினர். இந்த வீரர்களால் தான் இந்திய அணி கவுரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது. ரிங்கு 29 பந்துகளில் (4 பவுண்டரி, 2 சிக்ஸர்) 46 ரன்களும், ஜித்தேஷ் 19 பந்துகளில் (ஒரு பவுண்டரி,3 சிக்ஸர்) 35 ரன்களும் எடுத்தனர்.

இது தவிர தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது  ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். பின் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மேத்யூ வேட்  அதிகபட்ச ஸ்கோரான 36 ரன்கள் எடுத்தார், ஆனால் அவரால் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அதேபோல தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக தொடங்கிய நிலையில், அவரை அக்சர் படேல் வெளியேற்றினார். ஹெட் 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக அக்சர் படேல் அற்புதமாக பந்துவீசினார். அவர் தனது 4 ஓவர்களில் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவி பிஷ்னோய், அவேஷ் கான் தலா  விக்கெட் வீழ்த்தினர். இந்த பந்துவீச்சாளர்களை எதிர்த்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் நிற்க முடியவில்லை.

இந்நிலையில் இந்த வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். வெற்றிக்கு பிறகு பேசிய சூர்யகுமார், டாஸ் தவிர, விஷயங்கள் பெரும்பாலும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. இந்தியாவை பாதுகாப்பான ஸ்கோருக்கு அழைத்துச் செல்ல இரண்டு ஆக்ரோஷமான இன்னிங்ஸ்களை விளையாடிய இந்திய வீரர்கள், குறிப்பாக ரின்கு சிங் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகியோரின் ஆட்டத்தை பாராட்டினார். அதோடு அக்சர் படேலை அழுத்தத்திற்கு உள்ளாக்குங்கள், அவர் நன்றாக பந்துவீசுவார் என்று கேலியாக கூறினார்.

சூர்யகுமார் யாதவ் கூறியதாவது, “டாஸைத் தவிர, மற்ற விஷயங்கள் இன்றிரவு நம் வழியில் சென்றுவிட்டன என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஆம், டாஸ் எங்கள் வழியில் செல்லவில்லை. சிறுவர்கள் கதாபாத்திரங்களைக் காட்டியுள்ளனர், இன்னும் விளையாட்டின் இறுதி வரை போராடுகிறார்கள், வெற்றி பெற்றது அற்புதம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது,”

“போட்டிக்கு செல்வதற்கு முன்பு நாங்கள் கூட்டத்தில் பேசினோம், வீரர்கள் தங்கள் விளையாட்டை வெளிப்படையாக விளையாடவும், அச்சமின்றி இருக்கவும் நான் அவர்களிடம் சொன்னேன்,” “சில வேகமான விக்கெட்டுகளை இழந்த பிறகு, மூத்த பேட்டர்களின் விக்கெட்டுகள், அந்த இளம் வீரர்கள் (ரிங்கு மற்றும் ஜிதேஷ்) அவர்கள் பேட்டிங் செய்த விதம் மற்றும் எங்களை ஒரு போட்டி ஸ்கோரை எட்டியதற்கு பெருமை சேரும்”

“எனக்கு எப்பொழுதும் அக்சர் படேலை அழுத்தத்தில் வைப்பது மிகவும் பிடிக்கும். அழுத்தத்தில் இருக்கும் போது அவர் நன்றாகப் பந்துவீசுவார். இன்றிரவு அவர் பந்துவீசிய விதம் நம்பமுடியாததாக இருந்தது. டெத் ஓவர்களில் ஸ்டம்ப்களில் யார்க்கர்களை வீசுவது என்ற திட்டம் மிகவும் தெளிவாக இருந்தது, நாங்கள் அதை முயற்சி செய்தோம். அது வேலை செய்யவில்லை என்றால், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார். மேலும் பெங்களூருவில் நடக்கும் கடைசி டி20 போட்டியில் விளையாடும் லெவன் அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறினார்..