நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.

4வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஆஸ்திரேலிய அணிக்கு 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது, பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது டீம் இந்தியா. சூர்யகுமார் தலைமையிலான முதல் தொடர் வெற்றி இதுவாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ரின்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினர். இந்த வீரர்களால் தான் இந்திய அணி கவுரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது. ரிங்கு 29 பந்துகளில் (4 பவுண்டரி, 2 சிக்ஸர்) 46 ரன்களும், ஜித்தேஷ் 19 பந்துகளில் (ஒரு பவுண்டரி,3 சிக்ஸர்) 35 ரன்களும் எடுத்தனர்.

இது தவிர தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது  ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். பின் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மேத்யூ வேட்  அதிகபட்ச ஸ்கோரான 36 ரன்கள் எடுத்தார், ஆனால் அவரால் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அதேபோல தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக தொடங்கிய நிலையில், அவரை அக்சர் படேல் வெளியேற்றினார். ஹெட் 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை.

பந்து வீச்சாளர்கள் அற்புதம் செய்தனர் :

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக அக்சர் படேல் அற்புதமாக பந்துவீசினார். அவர் தனது 4 ஓவர்களில் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவி பிஷ்னோய், அவேஷ் கான் தலா  விக்கெட் வீழ்த்தினர். இந்த பந்துவீச்சாளர்களை எதிர்த்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் நிற்க முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியால் 20 ஓவரில் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.