மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள பொது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக, உதவி போலீஸ் கமிஷனர் (ACP) அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது வொர்லி காவல் குடியிருப்பில் தனியாக வசித்து வரும் 56 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி, பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அணுகியுள்ளார். அச்சிறுமிடம் ஆபாசமாக நடந்து கொண்டதோடு, தனது அந்தரங்க உறுப்புகளைத் தொடச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிரண்டு போன சிறுமி, வீட்டிற்கு ஓடிச் சென்று தனது தாயிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். பதறிப்போன தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
𝐃𝐆𝐏 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐀𝐂𝐏 𝐍𝐚𝐛𝐛𝐞𝐝 𝐟𝐨𝐫 𝐌𝐨𝐥𝐞𝐬𝐭𝐢𝐧𝐠 𝐌𝐢𝐧𝐨𝐫 𝐢𝐧 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜 𝐆𝐚𝐫𝐝𝐞𝐧 |
In a shocking incident that has shaken the city, a senior Assistant Commissioner of Police (ACP) has been arrested for allegedly molesting a 9-year-old girl in a public… pic.twitter.com/6dLNbEKq1n
— MUMBAI NEWS (@Mumbaikhabar9) May 2, 2026
கைது செய்யப்பட்ட அதிகாரி நாக்பூரைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2025 நவம்பர் முதல் மும்பையில் பணியாற்றி வருகிறார். மும்பையில் உள்ள டிஜிபி அலுவலகத்தின் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் (IT Department) ஏசிபி-யாகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமியின் புகாரைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே அந்த அதிகாரியை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த அதிகாரிக்கு தற்போது நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உயரதிகாரியே இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
