அசாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை நோக்கி அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது.
மொத்தம் 126 தொகுதிகளைக் கொண்ட அசாமில், ஆரம்பகட்ட நிலவரப்படி பாஜக 100 இடங்களை நெருங்கி வருவதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 28 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் கௌரவ் கோகோய் களம் கண்ட ஜோர்ஹாட் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது.
குறிப்பாக, ஜலுக்பாரி தொகுதியில் ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் வேளையில், டீ எஸ்டேட் மண்டலங்கள் மற்றும் மலையகப் பகுதிகளிலும் ‘தாமரை’ மலரத் தொடங்கியுள்ளது. 2015-ல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஹிமந்த பிஸ்வா சர்மா, தற்போது மீண்டும் ஒருமுறை காங்கிரஸின் கதவுகளை அடைத்து அசாமை தனது இரும்புப் பிடிக்குள் கொண்டு வந்துள்ளார்.
