ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி எம்.எஸ்.தோனியின் 15 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார். இப்போட்டியில் 6-வது வரிசையில் களம் இறங்கிய ரிங்கு சிங், 51 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 83 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 6-வது வரிசையில் களம் இறங்கி ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன் 2011-ம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிராக தோனி எடுத்த 70 ரன்களே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொல்கத்தா அணி 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது களமிறங்கிய ரிங்கு சிங், பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவரது இந்த அபாரமான ஆட்டத்தால் கொல்கத்தா அணி கௌரவமான ஸ்கோரை எட்டியது மட்டுமல்லாமல், பின்னர் நடைபெற்ற சூப்பர் ஓவரிலும் ரிங்கு சிங் பவுண்டரி அடித்து தனது அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இந்நிலையில் தோனியின் நீண்ட கால சாதனையை ஒரு இளம் இந்திய வீரர் முறியடித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், ரிங்கு சிங்கின் அபாரமான ஃபினிஷிங் திறமைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.