சென்னை புளியந்தோப்பு பகுதியில் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அக்காவின் காதலனைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதாவது சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவருடைய அக்காவும், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 21 வயது வாலிபரும் கடந்த சில காலமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், விரைவில் திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இதன் காரணமாக, அந்த வாலிபர் தனது காதலியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். குடும்பத்தினர் அனைவரும் அவரிடம் சகஜமாகப் பழகி வந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று அந்தச் சிறுமியைப் பள்ளியில் விடுவதாகக் கூறி அந்த வாலிபர் அழைத்துச் சென்றுள்ளார். வருங்கால மருமகன் தானே என்ற நம்பிக்கையில் பெற்றோரும் சிறுமியை அவருடன் அனுப்பி வைத்தனர்.
சிறுமியை அழைத்துச் சென்ற வாலிபர், அவருக்குப் பிடித்தமான உணவுகள் மற்றும் உடைகளை வாங்கிக் கொடுத்து ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். பின்னர், ஓட்டேரி பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் சிறுமியை அழைத்துச் சென்ற வாலிபர், அங்கு அவருக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, சிறுமியை அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார்.
வீட்டிற்கு வந்த சிறுமி யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுதுகொண்டே சிறுமி விவரித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
