சொகுசு ஹோட்டல்கள் அல்லது ரிசார்ட்டுகளுக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் உள்அலங்காரம் நம்மைப் பெரிதும் கவரும். ஆனால், பலரையும் வியப்பிலும், சில நேரங்களில் சங்கடத்திலும் ஆழ்த்துவது அங்கிருக்கும் கண்ணாடியால் ஆன பாத்ரூம்கள் தான். தனியுரிமை முக்கியம் என்று கருதப்படும் இந்த காலத்தில், பாரம்பரிய சுவர்களை எடுத்துவிட்டு ஏன் கண்ணாடி வைக்கிறார்கள் என்று பலரும் யோசிப்பதுண்டு. இது வெறும் அழகுக்கான ‘டிசைன்’ மட்டும் அல்ல; இதற்குப் பின்னால் ஹோட்டல் நிர்வாகங்களின் மிக ஆழமான திட்டமிடலும், சில நடைமுறை காரணங்களும் ஒளிந்துள்ளன.
பொதுவாக ஹோட்டல் அறைகள் அளவில் சிறியதாக இருக்கும்போது, அங்கு சிமெண்ட் சுவர்களை எழுப்பினால் அறை மேலும் சிறியதாகவும், நெருக்கமானதாகவும் தோன்றும். ஆனால், கண்ணாடி சுவர்கள் அமைப்பதன் மூலம் அறையும் பாத்ரூமும் ஒரே இடமாகத் தெரிந்து, அறை பார்ப்பதற்குப் பெரியதாகவும், காற்றோட்டமாகவும், ஆடம்பரமாகவும் காட்சியளிக்கிறது.
மேலும், பகல் நேரத்தில் அறையின் வெளிச்சம் பாத்ரூமிற்குள் எளிதாகச் செல்வதால், மின்விளக்குகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இது ஹோட்டல்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவுகிறது.
இவற்றுடன், சுகாதாரம் மற்றும் பராமரிப்பை எளிதாக்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும். வழக்கமான சுவர்கள் அல்லது டைல்ஸ் ஒட்டப்பட்ட பாத்ரூம்களில் ஈரப்பதம் காரணமாகப் பூஞ்சை அல்லது பாசி படிந்து, அதைச் சுத்தம் செய்வது கடினமாகிவிடும். ஆனால் கண்ணாடியில் கறைகள் உடனே தெரிந்துவிடுவதால், ரசாயனங்கள் மூலம் அதை மிக வேகமாகவும் எளிதாகவும் துடைத்துவிட முடியும்.
தங்களின் பிரைவசி பாதிக்கப்படுமோ என்று கவலைப்படும் வாடிக்கையாளர்களுக்காக, இந்த கண்ணாடிகளில் உள்பக்கமோ அல்லது வெளிப்பக்கமோ ரோலர் பிளைண்ட்ஸ் (திரைச்சீலைகள்) அமைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒரே ஒரு சுவிட்ச் அழுத்தினால் மங்கலாக மாறும் ‘ஃபாக்ட் கிளாஸ்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
மற்றொரு சுவாரசியமான காரணம் என்னவென்றால், தங்கும் வாடிக்கையாளர்கள் சிலர் பாத்ரூம் விளக்குகளை அணைக்காமல் தூங்கிவிடுவதுண்டு. கண்ணாடி சுவராக இருக்கும்போது, அந்த வெளிச்சம் அறைக்குள் தூங்குபவர்களைப் பாதிக்கும் என்பதால், அவர்களே எழுந்து விளக்கை அணைத்துவிடுவார்கள். இதன் மூலமும் ஹோட்டல்களுக்கு மின்சாரம் வீணாவது தடுக்கப்படுகிறது.
