ஜார்கண்ட் மாநிலம் லோஹர்தகா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் நள்ளிரவில் புகுந்த விஷப் பாம்பு கடித்ததில், 13 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று மாணவிகள் கடுமையான விஷ பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு மாணவிகள் அனைவரும் வழக்கம் போல தங்களது அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 11 மணியளவில் ‘கரைட்’ எனப்படும் அதிக விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்று அறைக்குள் புகுந்துள்ளது.
அது முதலில் தூங்கிக் கொண்டிருந்த வர்ஷா உரான் (13) என்ற மாணவியைக் கடித்தது. வலியால் அவர் அலறித் துடித்த சத்தம் கேட்டு மற்ற மாணவிகள் விழிப்பதற்குள், அந்தப் பாம்பு அங்கிருந்த அனிஷா உரான், மனிஷா குமாரி மற்றும் புல்மினியா உரான் ஆகிய மேலும் மூன்று மாணவிகளையும் அடுத்தடுத்து கடித்தது.
பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட மாணவிகளைப் பள்ளி ஆசிரியர்கள் நள்ளிரவிலேயே மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாணவிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், வர்ஷா உரான் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மற்ற மாணவிகளில் புல்மினியா உரான் என்பவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும் இரு மாணவிகளுக்கு அந்த மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் ஆய்வாளர் அஜித் குமார், மாணவியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், விடுதிப் பாதுகாப்பு குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
