வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்..
தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா பாலம் அருகே வாரச்சந்தை மைதானத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச வேட்டி சேலைக்கு டோக்கன் தந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டு இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் கூட்டத்தில் சிக்கி படுகாயமடைந்த 10 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.