தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ. மேகநாத ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அத்துறைக்கு ஜெ. மேகநாத ரெட்டி பொறுப்பேற்று கொண்டது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஜெ. மேகநாத ரெட்டி சிறப்பான முறையில் செயல்பட்டு வந்ததோடு, முதல்முறையாக புத்தகக் கண்காட்சியையும் அங்கு நடத்தி பாராட்டைப் பெற்றார். மாவட்ட ஆட்சியராக தன்னுடைய பணியை துடிப்புடன் ஜெ. மேகநாத ரெட்டி செய்து வந்ததன் காரணமாகவே அவரை உதயநிதி ஸ்டாலின் டிக் செய்துள்ளார்.

அதன் பிறகு ஜெ. மேகநாத ரெட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துறைகளில் பணியாற்றிய போது சிறப்பான முறையில் செயல்பட்ட அதிகாரிகளை தான் பதவி ஏற்றவுடன் அந்த அதிகாரிகளை முக்கியத்துறைகளுக்கு நியமித்து விடுவாராம். மேலும் முதல்வர்  ஸ்டாலினின் அதே பார்முலாவை தான் தற்போது உதயநிதி ஸ்டாலினும் பின்பற்றி சிறப்பான முறையில் செயல்பட்ட ஐஏஎஸ் அதிகாரியை தன்னுடைய துறைக்கு நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.