தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். அந்த வகையில் தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்து விதமான திட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக 5% இட ஒதுக்க வேண்டும்.

அதேபோல் அரசு நிறுவனமான ஆவின் பூத்துக்கு முன்னுரிமை அளித்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு உடனடி அனுமதி வழங்க வேண்டும்.  மத்திய அரசு சார்பாக வழங்கப்பட்ட தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை தகுதியுள்ளவர்களுக்கு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வரை அரசு வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அதேபோல் முன்னதாக இலவச வீட்டு மனை கேட்டு 150-க்கும் மேற்பட்டோர் மனுக்களை வழங்கியுள்ளனர்.