கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் வசந்தா நகரில் நித்தியானந்தன் என்பவர் வசித்து வருகிறார். தொழிலதிபரான நித்தியானந்தன் தனது செல்போன் எண்ணில் இரண்டு வங்கி கணக்குகளை இணைத்து இருக்கிறார். கடந்த 31-ஆம் தேதி நித்யானந்தனின் செல்போன் எண் திடீரென முடக்கப்பட்டு, மறுநாள் தானாக அந்த எண் மீண்டும் இயங்கியது. இதற்கிடையில் வங்கி கணக்கிலிருந்து 13 1/2 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை பார்த்து நித்தியானந்தன் அதிர்ச்சியடைந்தார். அவரது செல்போன் எண்ணை முடக்கிய மர்ம நபர் ஆன்லைன் பண பரிமாற்றம் மூலமாக நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக நித்தியானந்தன் கோவை மாநகர சைபர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி கூறியதாவது, முதலில் தொழிலதிபரின் செல்போன் எண்ணை மர்ம நபர்கள் முடக்கியுள்ளார். பின்னர் அந்த எண் கொண்ட சிம் கார்ட் தொலைந்து விட்டதாகவும், மாற்று சிம்கார்டு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட சிம்கார்டு நிறுவனத்திற்கு அந்த நபர் இ-மெயில் அனுப்பி உள்ளார். இதனையடுத்து அதே எண் கொண்ட சிம் கார்டை பெற்று வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்திருக்கிறார். இந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.