அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முஸ்லிம் நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுடன் சுமுக உறவை ஏற்படுத்தி ‘அப்ரஹாம் உடன்படிக்கையில்’ இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுகளில் பாகிஸ்தான் பங்கேற்க வேண்டுமானால், அது இஸ்ரேலை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவின் இந்த அழுத்தத்திற்குப் பணிய பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதுகுறித்து அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், பாகிஸ்தான் தனது அடிப்படைக் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்றும், ஒரு நாள்கூட நம்ப முடியாதவர்களுடன் தங்களால் கைக்கோர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே இஸ்ரேலுக்குச் செல்ல செல்லாது என்று தங்களது பாஸ்போர்ட்டில் அதிகாரப்பூர்வமாக அச்சிட்டுள்ள ஒரே நாடு பாகிஸ்தான் தான் என்றும், இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த 78 ஆண்டுகளாக இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்காத பாகிஸ்தான், 1967-ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில் சுதந்திர பாலஸ்தீன நாடு உருவாகும் வரை இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.

உள்நாட்டில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மக்களின் உணர்வுகள் மிக வலுவாக இருப்பதால், இஸ்ரேலை அங்கீகரிப்பது எந்தவொரு பாகிஸ்தானிய அரசுக்கும் அரசியல் ரீதியாகப் பெரும் ஆபத்தாக முடியும். அதே நேரத்தில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான், வளைகுடா நாடுகளின் நிதியுதவியையும் அமெரிக்காவின் உறவையும் பெரிதும் நம்பியுள்ளது.

சவூதி அரேபியா உள்ளிட்ட முக்கிய வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் அழுத்தத்தால் இஸ்ரேலுடன் உறவை வளர்த்து வரும் சூழலில், டிரம்பின் கோரிக்கையை நேரடியாக நிராகரிப்பது பாகிஸ்தானுக்குப் பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியாக ஒரு சவாலான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.