பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பல திட்டங்களை தொடங்கி வைக்கக் கர்நாடக மாநிலம் ஹூப்பாலி வந்து உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பில் ஒரு சிறுவன் திடீரென்று பிரதமருக்கு அருகில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. பாதுகாப்பு வளையத்தை தாண்டி திடீரென சாலையில் குதித்து பிரதமரை நெருங்கிய அச்சிறுவனுக்கு சுமார் 15 வயது இருக்கும்.

அந்த சிறுவன் காவலர்களையும் மீறி கையில் மாலையுடன் பிரதமருக்கு அருகில் வந்துவிட்டான். உடனே அங்கிருந்த பிரதமரின் சிறப்புப் பாதுகாப்பு குழு கடைசி நிமிடத்தில் சிறுவனை தடுத்து நிறுத்தி சாலையோரம் கொண்டுபோய் விட்டனர். இதற்கிடையில் பிரதமர், சிறுவனின் மாலையை பெற்றுக்கொண்டார். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி பிரதமருக்கு மிக நெருக்கமாக சிறுவன் எப்படி வந்தான் என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. இந்த பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.