திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு- அம்பாத்துறை வழித்தடத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 6.15 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த வழித்தடம் மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இந்நிலையில் திடீரென ரயில் பெட்டிகள் மீது பாறை கற்கள் உருண்டு விழுந்தது.

இதனால் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த வினோத் என்பவரது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் இருக்கைகளை விட்டு எழுந்து அவசர அவசரமாக ஜன்னல் கதவுகளை மூடி அலறி சத்தம் போட்டனர். அதேநேரம் ரயிலும் நிறுத்தப்படாததால் திண்டுக்கல் ரயில் நிலையத்தை ரயில் சென்று அடைந்ததும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி ரயில்வே டாக்டர்கள் காயமடைந்த வினோத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டனர். மர்ம நபர்கள் யாராவது மலையில் இருந்து பாறை கற்களை பெயர்த்து ரயில் மீது வீசி இருப்பார்களா என்ற சந்தேகம் வந்ததால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.