கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னப்பள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்குமார் (23). இவர் பூனப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.‌ இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி நிறுவனத்தில் வைத்து அஜித்குமார் மற்றும் சதீஷ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் தன்னுடைய நண்பர்களை நிறுவனத்திற்கு வரவழைத்தார். அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து சதீஷை கத்தியால் குத்தினர்.

இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மத்தகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பிரகாஷ் ராஜ், வீரபாண்டி குமார், அருண்பாண்டி, வினய், அஜய், அஜித் குமார், சுனில் குமார், சச்சின் மற்றும் மற்றொரு அஜித்குமார் என 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் தற்போது வீரபாண்டி குமார், பிரகாஷ் மற்றும் அருண்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ள நிலையில் மற்றவர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.