உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருகை புரிகிறார்கள். பல்வேறு சிறப்புகள் மிகுந்த தஞ்சை பெரிய கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்த கால் பந்தம் நடப்பட்டது.

இந்த திருவிழா மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் நிலையில் கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய திருவிழாவான சித்திரை தேரோட்டம் வருகின்ற 20-ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து வருகின்ற 23-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் புறப்பாடு நடைபெறும். அதே நாளில் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். மேலும் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு வருகின்ற 20-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.