ஊட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து கும்பகோணம் மார்க்கெட்டுக்கு தினமும் லாரியில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் காய்கறிகளுக்கு பணம் வசூல் செய்வதற்காக ஓட்டுநருடன் ஒருவர் வாரத்திற்கு ஒரு முறை வருவது வழக்கம்.
இந்நிலையில் சம்பவம் நாளன்று லாரியின் ஓட்டுனர் ஆனந்த் மற்றும் பணம் வசூல் செய்பவர் ஆகியோர் சேர்ந்து கும்பகோணம் மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்றனர். அதன்பின் அங்கு இருவரும் காய்கறிகளை இறக்கிவிட்டு ரூ. 42 லட்சம் பணத்தை வசூல் செய்து கொண்டு மேட்டுப்பாளையத்திற்கு திரும்பினார்.
இவர்கள் பெட்டவாய்த்தலை பகுதிக்கு அருகே சென்றுகொண்டிருந்தனர் அப்போது அவர்கள் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக ஒரு கடைக்கு சென்றனர். இந்நிலையில் திடீரென சில மர்ம நபர்கள் காரில் வந்து லாரியில் இருந்த ரூ.42 லட்சம் பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
இதை பார்த்த ஆனந்த் மற்றும் பணம் வசூல் செய்பவர் ஆகிய இருவரும் அதிர்ச்சியடைந்ததுடன் இச்சம்பவத்தை பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.