மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு ரோட்டோர தாபாவில் (roadside dhaba), பெண் ஒருவர் அநாகரிகமான முறையில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலில் அருகே கழிப்பறை வசதி இருந்தபோதிலும், அதனைப் பயன்படுத்தாமல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பகுதிக்கு அருகிலேயே அந்தப் பெண் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அங்கிருந்த மற்றொரு பெண் வீடியோ எடுத்து, “இங்கே குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள், நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று தட்டிக்கேட்டும் அந்தப் பெண் எதனையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளார். ​இந்த விவகாரம் தாபா ஊழியர்கள் மற்றும் மேலாளரின் கவனத்திற்குச் சென்றதும், அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கி காரசாரமாகக் கேள்வி எழுப்பினர். ஆனால், தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க மறுத்த அந்தப் பெண், தாபா ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், “இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா?” எனப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதே சமயம், அந்தப் பெண்ணின் செயல் தவறானது என்றாலும், அவரது வீடியோவை இப்படி பொதுவெளியில் பகிர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவது சரிதானா என்ற ரீதியிலும் இணையத்தில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.