எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கரும்பு கொள்முதல் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே கரும்பு கொள்முதல் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் 4 முறை பொங்கல் விழாக்களை கொண்டாடியுள்ளார். அப்போது கரும்பு வழங்கிய அரசாணைகளை முழுமையாக படிக்காவிட்டாலும் அவற்றின் சாரம்சத்தை யாவது தெரிந்திருக்க வேண்டும்.

தற்போது அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையைப் பற்றி படித்தோ அல்லது படித்தவர்களிடம் கேட்டறிந்தோ தெரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் எதையுமே தெரிந்து கொள்ளாமல் அறிக்கை வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது கரும்பு கொள்முதல் அதில் கூலி உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து ஒரு கரும்புக்கு ரூபாய் 30 வழங்க ஆணையிடப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்பது அவருக்கு தெரியுமா?.

எதையுமே தெரிந்து கொள்ளாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது கரும்பு கொள்முதலுக்கு கூலி உட்பட அனைத்தையும் செய்து ஒரு முழு கரும்புக்கு ரூபாய் 33 வழங்கப்பட இருக்கிறது. இது முந்தைய அரசால் வழங்கப்பட்ட தொகையை விட 10 சதவீதம் அதிகம். எனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே தேவையில்லாமல் அறிக்கை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.