புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதாக இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாதுகாப்பு நலன் கருதி 2-வது முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒத்தி வைத்துள்ளார். இதற்கு முன்பு 2-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதாக இருந்த நிலையில், சில காரணங்களால் ஜல்லிக்கட்டு போட்டி தள்ளிப்போனது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் எம்எல்ஏ மா. சின்னதுரை ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 400-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்க இருந்தது.

அதன்பிறகு 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் போட்டியில் கலந்து கொள்ள இருந்தார்கள். இதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் நடைபெற்ற நிலையில், திடீரென ஜனவரி 6-ம் (இன்று) தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் ஒத்திவைத்து அறிவிப்பு வெளியிட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டாலும் அப்பகுதிக்கு ஏராளமான மாடுபிடி வீரர்கள் வருகை புரிந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் இருப்பதற்காக தச்சங்குறிச்சி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.