உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் மோசடிக்கு ஆளான 42 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரிடம் சுமார் ரூ.1.40 கோடி மோசடி செய்ததாக கரிமா சிங் என்ற பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். மருத்துவரின் சட்டைப் பையில் இருந்து கிடைத்த கடிதத்தில், தனது உயிரிழப்புக்கு கரிமா சிங்கும் அவரது கூட்டாளிகளுமே காரணம் என குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக் கடனை முடித்துத் தருவதாக கூறி மருத்துவரிடம் இருந்து முக்கிய ஆவணங்களை கரிமா சிங் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி 6 வெவ்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ.1.40 கோடி கடன் பெறப்பட்டு, பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர். ஆரம்பத்தில் மருத்துவரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக 2 முதல் 3 மாதங்கள் வரை கடன் தவணைகளையும் அவர் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் கடன் தவணைகள் செலுத்தப்படாமல் போனதால், வங்கிகள் மருத்துவரிடம் பணத்தை திருப்பிச் செலுத்துமாறு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் கரிமா சிங் மற்றும் அவரது தந்தை துருவ் நாராயண் சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, கரிமா சிங்கிடம் இருந்து போலீஸார் கைப்பற்றியதாக கூறப்படும் டைரி இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. அதில், 2026-ஆம் ஆண்டில் மிகப்பெரிய செல்வந்தராக வேண்டும் என்றும், கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் அவர் இலக்கு குறித்து எழுதியிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த டைரி குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மருத்துவரிடம் நடைபெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பான முழு பின்னணியையும் போலீஸார் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.