நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் செல்விகுமார் வரவேற்று பேசியுள்ளார். மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோமதி தனபால், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து நிகழ்ச்சியில் கலெக்டர் கூறியதாவது, கடந்த 2022 -ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், நடைபாண்டில் 16 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் என மொத்தம் 26 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அதில் வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28,94 ஆயிரம் மதிப்பீட்டில் கொள்முதல் நிலையம் புதிதாக கட்டப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தின் மூலமாக வாய்மேடு மேற்கு, வண்டுவாஞ்சேரி, அண்ணா பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 600 விவசாயிகள் பயன்பெறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.