நடப்பு ஒரே ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் இருந்து வெவ்வேறான இரு கூட்டணிகள் வாயிலாக, இரண்டு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடங்களைக் காங்கிரஸ் கட்சி தன்வசப்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் கிறிஸ்டோபர் திலக் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது மாறியுள்ள அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மற்றுமொரு மாநிலங்களவை இடம் கிடைத்துள்ளது. இதன் மூலம், இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே பதவிக் காலம் மீதமுள்ள ஒரு மாநிலங்களவைச் சீட்டை காங்கிரஸ் கட்சி தற்போது பெற்றுள்ளது.

ஒரே ஆண்டிற்குள் இரு வெவ்வேறு கூட்டணிகளின் கீழ், இரண்டு மாநிலங்களவை இடங்களைத் தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ் கட்சி கைப்பற்றியிருப்பது அக்கட்சியின் வியூகத்திற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது கிடைத்துள்ள ராஜ்ய சபா சீட் மூலம் பிரவீன் சக்கரவர்த்தி எம்பியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.