திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை பகுதியில் உள்ள ஏடிஎம்மில் 38 லட்ச ரூபாயும், கலசபாக்கத்தில் உள்ள தனியார் ஏடிஎம்மில் 3 லட்ச ரூபாயும் கொள்ளை அடிக்கப்பட்டது. அதன்படி மொத்தமாக 72.5 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக  போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஆந்திர மாநிலத்தின் பதிவெண் கொண்ட வாகனத்தில் மர்ம நபர்கள் ஏடிஎம்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளது. ஆந்திர பதிவெண் கொண்ட வாகனத்தில் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஆரிப் என்பவரை பெங்களூருவில் வைத்து தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கொள்ளையருக்கு அடைக்கலம் கொடுத்த விடுதி உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்கள்.