திருநெல்வேலி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு போக்குவரத்து கழக குளிர் சாதன பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை யார் அனுப்பினார்கள் ?யாருக்கு அனுப்பினார்கள்? என்பதை தெரிந்துகொள்ள தடயவியல் சோதனை அதிகாரிகளை கூட்டி வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்த பேருந்தில் 9-ம் எண் என்ற படுக்கை இருக்கையின் கீழ் ஏர்கன் வகை துப்பாக்கியும் பயங்கர ஆயுதங்கள் ஆன அரிவாள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இதை சுத்தம் செய்யும் பணியாளர்களில் ஒருவர் கண்டெடுத்ததாகவும் அவர் அளித்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை பணிமனையில் இருந்து பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்ற நிலையில், தற்போது அவ்விடம் பரபரப்பாக காணப்படுகிறது.