கோவையில் நீதிமன்றம் அருகே நேற்று முன்தினம் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

கோவை நீதிமன்றம் பின்புறம் நேற்று முன்தினம் கோகுல் மற்றும் மனோஜ் ஆகிய இருவர் மீது  மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தநிலையில், இளைஞர் மனோஜ்க்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த கொலையாளிகள் எங்கே இருக்கிறார்கள் என்பது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் வலைவீசி தேடிவந்தனர். அப்போது நீலகிரியில் 7 பேர் கொண்ட கும்பல் பதுங்கியிருந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் மேட்டுப்பாளையம்  அருகே அழைத்து வந்த போது இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என கூறி வெளியேறிய நிலையில், போலீசாரை தாக்க முயன்றதால், அவர்களில் இருவரை கால்களில் சுட்டு பிடித்தனர்..

மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 5 பேர் காவல் நிலையத்தில் உள்ளனர். விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர். இந்த நிலையில் 7 பேரும் கொலை செய்து, பின்னர் தப்பிப்பதற்காக உறுதுணையாக இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்துள்ளனர். தனிப்படை விசாரணையில் விக்னேஷ் மற்றும் விக்ரம் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

இந்த 3 பேரும், கொலையாளிகள் 7 பேரும் தப்பிப்பதற்காக இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தந்து உதவியதாக போலீஸ்  விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கோகுல் கொலை வழக்கை பொறுத்தவரை மொத்தம் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கடைசியாக கைது செய்யப்பட்ட 3 பேரும் நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை எனவும், கொலையாளிகளுக்கு தேவையான உதவிகளை, அதாவது தப்பிப்பதற்கு இரு சக்கர வாகனங்கள் தந்து உதவியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 10 பேர் கைதாகி உள்ளனர்.