கோவை நீதிமன்றத்திற்கு கடந்த 13-ம் தேதி பழைய வழக்குக்கு ஆஜராக மனோஜ் மற்றும் கோகுல் ஆகிய இருவர் வந்திருந்த நிலையில் அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் 5 பேர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர்களை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் இருவரும் சரிந்த நிலையில் கோகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு மனோஜ் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் தொடர்புடைய டேனியல், ஹரி, கௌதம், சூர்யா, அருண்குமார் மற்றும் ஜோஸ்வா ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்த நிலையில் கோத்தகிரி காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதன் பிறகு போலீசார் 7 பேரையும் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில் திடீரென ஒருவர் வாந்தி மற்றும் இயற்கை உபாதை வருவதாக கூறியதால் வண்டியை நிறுத்தியுள்ளனர். அப்போது குற்றவாளிகளில் ஜோஸ்வா மற்றும் கௌதம் ஆகிய இருவரும் தப்பி ஓட முயன்றதோடு அவர்கள் ஏற்கனவே முட்புதரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து உதவி ஆய்வாளர் யூசுப் என்பவரை வெட்டினார்கள். இதன் காரணமாக போலீசார் தப்பி ஓட முயன்றவர்களை துப்பாக்கியால் சுட்டதில் இருவருக்கும் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.