இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஸ்டேசி ஏஹெர்ன் என்பவரின் 3 வயது பெண் குழந்தை வைன்டர், உண்ண முடியாத வித்தியாசமான பொருட்களைச் சாப்பிடும் அரியவகை பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளாள். குழந்தை பிறந்த 13 மாதங்கள் வரை சாதாரணமாக வளர்ந்த நிலையில், அதன்பின் வீட்டின் சோஃபாவில் உள்ள பஞ்சு, சுவரில் உள்ள சுண்ணாம்பு மற்றும் கம்பளி போன்றவற்றை உண்ணத் தொடங்கியதை தாய் கவனித்துள்ளார்.
இரவு நேரத்தில் தூக்கத்திலிருந்து எழும் குழந்தை, தனது கட்டிலையும் போர்வையையும் மென்று தின்னத் தொடங்கியுள்ளது. குழந்தைப் பருவத்தில் வழக்கத்திற்கு மாறாக நடக்கும் இந்த அதிர்ச்சி சம்பவத்தைப் பார்த்த தாய், உடனடியாகக் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.
குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அக்குழந்தை ‘ஆட்டிசம்’ குறைபாட்டுடன், உணவல்லாத பொருட்களை விரும்பி உண்ணும் ‘பைகா’ (Pica) என்ற அரியவகை நோயினாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளிடம் இந்த பைகா நோய் பாதிப்பு ஏற்படுவது இயல்பானது என்றும் மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.
தனது குழந்தையின் நிலை குறித்து வருத்தத்துடன் பேசும் தாய் ஸ்டேசி, “அவள் உண்மையில் வீட்டை முழுமையாகச் சாப்பிட முயல்கிறாள். புதிய சோஃபாவிலிருந்து பஞ்சுகளை எடுத்துச் சாப்பிடுகிறாள். சாதாரண உணவை விடப் பஞ்சை உண்பதையே விரும்புவதுடன், புகைப்பட ஃபிரேம்களை உடைத்துக் கண்ணாடியையும் சாப்பிட முயன்றாள்” என்று வேதனையோடு கூறியுள்ளார்.
குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பேச முடிவதில்லை என்றும், அவளுக்குப் பல நடத்தைச் சிக்கல்கள் இருப்பதாகவும் தாய் குறிப்பிட்டுள்ளார். குழந்தையை முழு நேரமாக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால் பெரிய அளவிலான காயங்கள் ஏதும் ஏற்படாமல் தடுத்துப் பராமரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
