கபில் தேவ் கடத்தப்பட்டதாக வைரலான வீடியோவின் உண்மை தன்மை குறித்து தெரியவந்துள்ளது.

கபில் தேவ் இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கபில்தேவ் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது, அதைக் கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கபில்தேவின் கைகள் கட்டப்பட்டு வாயில் துணி வைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும் பகிர்ந்தார்.

கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த வீடியோ வேறு யாருக்காவது கிடைத்ததா? அவர் உண்மையில் கபில்தேவ் அல்ல என்றும், கபில்பாஜி பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்று நம்புகிறேன்” என    பகிர்ந்தார். கம்பீரின் இந்த வீடியோவுக்கு கபில்தேவ் எந்த எதிர்வினையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இந்த வீடியோவைப் பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த வைரலான வீடியோவில், கபில்தேவின் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டுள்ளது. இரண்டு பேர் ஒரு வீட்டிற்குள் அழைத்துச் செல்வதைப் பார்க்க முடிகிறது. சுற்றிலும் ஏராளமான மரங்கள் காணப்படுகின்றன. இது கபில்தேவ் இல்லை என்றும் சிலர் சந்தேகம் தெரிவித்தனர்.

மேலும் இந்த வீடியோ போலியானதா என்று சில நெட்டிசன்கள் கேட்டனர். இந்த வீடியோ வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது என்றும் சிலர்  கூறினர்.ஒருவர் இது ஒரு விளம்பர படமாக இருக்கும் என தெரிவித்தார். கபில்தேவின் வீடியோ ஒரு விளம்பரத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அதுதான் உண்மை என தெரியவந்துள்ளது. இந்த வீடியோ உலக கோப்பையின் விளம்பர படத்தின் ஒரு கிளிப் என்பதே உண்மை. கவுதம் கம்பீர் மீண்டும் ஒரு வீடியோவை பகிர்ந்து குழப்பத்தை தீர்த்து வைத்தார்.

 

தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் கவுதம் கம்பீர், அரே கபில்தேவ் பாஜி நன்றாக விளையாடினார்! ஆக்டிங் கா உலகக் கோப்பை பி ஆப் ஹி ஜீதோகே! அப் ஹமேஷா யாத் ரஹேகா கி ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மொபைல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இலவசம் என பதிவிட்டு, கபில் தேவ் நடித்துள்ள உலக கோப்பைக்கான விளம்பர வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை டேக் செய்து முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், ‘போலி கிளிப்’ என சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு பலரும் பலவிதமான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

இது கபில்தேவ் நடித்த விளம்பரத்தின் கிளிப் என்பதை ரசிகர்கள் உணர்ந்ததும், சிரித்தனர். முதலில் சற்று டென்ஷன் ஆன கபிலின் ரசிகர்கள், விஷயம் தெரிந்த பிறகு அவர்களும் ரசித்தார்கள். இந்த வீடியோ வைரலாக பரவி நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.