போக்குவரத்து விதியை மீறி கார் ஓட்டிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக பாபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.  செப்டம்பர் 17ஆம் தேதி பஞ்சாப் லாகூரில் உள்ள குல்பெர்க்கில் வேகமாக ஆடி காரை ஓட்டிக் கொண்டிருந்த பாபர் அசாம்  அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பின் அவரிடம் விசாரித்தபோது, ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனுடன், அவர் 2000 பாகிஸ்தான் ரூபாய் (சுமார் 570 இந்திய ரூபாய்) அபராதம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு புறப்படத் தயாராகி வரும் நிலையில் பாபருக்கு எதிரான அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே  நீண்ட நாட்களுக்கு  பிறகு, இறுதியாக பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா நேற்று விசா வழங்கியது.பாகிஸ்தான் முதல் பயிற்சி ஆட்டத்தில் வரும் 29ம் தேதி ஹைதராபாத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள உலக கோப்பைக்காக நாளை இந்தியாவுக்கு செல்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானால் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியவில்லை. சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.