பொதுவுடைமை தலைவர் ஜீவானந்தத்தின் நினைவு தினம் இன்று. இதை முன்னிட்டு சென்னை காசிமேட்டில் உள்ள அவருடைய நினைவிடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர். நல்ல கண்ணு மற்றும் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது, சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே முறையில் நடத்துவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டு அதற்கான காய்களை நகர்த்தி வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலிலேயே அந்த திட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், எதிர் கட்சியான அதிமுக மட்டும் ஆதரவு கொடுத்துள்ளது. ஜெயலலிதா இருந்தால் கூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டார். இந்த திட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக தன்னுடைய கருத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது அதிபர் ஆட்சி முறையை கொண்டு வருவதற்கான திட்டமாகும். எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார். ஆனால் அது தவறானது. ஒரு உதாரணத்திற்காக இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டால், 2024 ஆம் ஆண்டு தேர்தல் நடத்த திட்டமிடும் மத்திய அரசு அடுத்த 5 வருடத்திற்கு ஆட்சியில் நீடிக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்? இதற்கு யார் உத்திரவாதம் தர முடியும் என்று கேள்வி எழுப்பினார்.