தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சங்கிலி முருகன், நகைச்சுவை நடிகர் வடிவேலு குறித்துக் கூறியுள்ள கருத்துகள் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு காலகட்டத்தில் வடிவேலுவுக்குத் தலைக்கனம் அதிகரித்துவிட்டதாகவும், அவர் அநியாயமான முறையில் சம்பளம் கேட்டதாகவும் அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவான ‘சுறா’ திரைப்படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்பியதாகச் சங்கிலி முருகன் கூறியுள்ளார். அப்போது சம்பளம் குறித்துப் பேசியபோது, ஒரு நாளைக்கு ரூ.10 லட்சமும், அரை நாள் வேலை செய்தாலும் அதே தொகையைக் கேட்கும் அளவுக்கு வடிவேலு அதிகக் கட்டணம் கோரியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆரம்ப காலத்தில் மிகவும் எளிமையான மனிதராக இருந்த வடிவேலு, திரையுலகில் புகழின் உச்சியை அடைந்த பிறகு அவரது அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது என்று சங்கிலி முருகன் குறிப்பிட்டுள்ளார். ‘தேவர் மகன்’ படப்பிடிப்பின் போது தன்னிடம் மிகவும் இயல்பாகப் பழகிய வடிவேலு, பின்னாள்களில் முற்றிலும் மாறிவிட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், வடிவேலுவின் பல நகைச்சுவைக் காட்சிகள் படப்பிடிப்பு தளத்திலேயே தன்னிச்சையாக உருவாக்கப் பட்டவை என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். குறிப்பாக ‘நேசம் புதுசு’ திரைப்படத்தில் சங்கிலி முருகனும் வடிவேலுவும் சேர்ந்து நடித்த “கையைப் பிடிச்சு இழுத்தியா” என்ற நகைச்சுவை காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் சம்பளம் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபோதிலும், 1990-களின் பிற்பகுதி முதல் 2010 வரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை மன்னனாக வடிவேலு கோலோச்சினார் என்பது குறிப்பிடத்தக்கது.
