திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில், அரசுப் பேருந்தில் சீட் பிடிக்க முயன்ற போது, கல்லூரி மாணவி கவுதமி மோசமான விபத்தில் சிக்கி பலியானார். கௌதமி, பி.எஸ்.சி படிப்பை முடித்த பின்னர், அரசு பணிக்காக டி.என்.பி.எஸ்.சி பயிற்சி முகாமில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். நேற்று மாலை, வழக்கம்போல டி.என்.பி.எஸ்.சி பயிற்சி முடித்து, வீட்டிற்குச் செல்ல கண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது, போளூரிலிருந்து கண்ணமங்கலம் வழியாக ரெட்டிபாளையம் செல்லும் அரசு பேருந்து வந்தது. கௌதமி பேருந்தில் சீட் பிடிப்பதற்காக ஏற முயன்றபோது, பேருந்து திடீரென பின்நோக்கி நகர்த்தப்பட்டது. அப்போது கெளதமி கீழே விழுந்து, பேருந்தின் பின் டயரில் சிக்கினார். இதில், அவர் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீசார் உடனடியாகச் சென்று, கௌதமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தந்தை ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அரசு பேருந்தை பறிமுதல் செய்து, விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.