அமெரிக்காவின் பிரபல நிதி நிறுவனமான பாஃப் குளோபல் ரிசர்ச் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின் படி, இந்தியர்கள் தங்களது பொன்னான நேரத்தின் பெரும்பகுதியைச் சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியிலேயே செலவழித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவலின்படி, ஒரு சராசரி இந்தியப் பயனர் மாதத்திற்குச் சுமார் 50 மணி நேரம், அதாவது தோராயமாக 49 மணி 42 நிமிடங்கள் வரை இன்ஸ்டாகிராம் செயலியில் மட்டுமே நேரத்தைச் செலவிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறுகிய காணொளிகளான ரீல்ஸ் கலாச்சாரம் எந்த அளவுக்கு மக்களின் கவனத்தைத் தன்வசம் ஈர்த்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் இந்தத் தரவுகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

இந்தச் பட்டியலில் இன்ஸ்டாகிராமிற்கு அடுத்தபடியாக யூடியூப் செயலி 47 மணி 23 நிமிடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், பிரபலமான ‘கரீனா ஃபரீ ஃபயர்’ ஆன்லைன் சண்டை விளையாட்டு 41 மணி 12 நிமிடங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவற்றுடன் ஃபேஸ்புக், ஜியோ ஹாட்ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிற முன்னணி செயலிகளும் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளன. ஆன்லைன் பொழுதுபோக்கு மற்றும் கேமிங் தளங்களில் இந்தியர்கள் தாங்கள் உயிராய் நேசிக்கும் நேரத்தை எந்தளவுக்கு இழந்து வருகிறார்கள் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்தத் தரவுகள் வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது வியப்பையும் நகைச்சுவையான விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். “எங்களிடம் புத்தகம் படிக்கவோ அல்லது வேறு பயனுள்ள விஷயங்களைச் செய்யவோ நேரமில்லை என்று புலம்பும் பலரும், மாதத்திற்கு இரண்டு முழு நாட்களை வெறும் ஸ்கிரீன் டைமுக்காக வீணடிக்கிறார்கள்” என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். ‘ஒரு ரீல்ஸ் மட்டும் பார்த்துவிட்டு வைத்துவிடலாம்’ என்று தொடங்கும் இந்த வழக்கம் தற்போது பலருக்கும் ஒரு பகுதி நேர வேலையாகவே மாறிவிட்டதாக இணையவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.