அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு இனி கொரானா பரிசோதனை கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப் 7 வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றும் படியும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் உள் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது. மேலும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும் ஏற்கனவே தமிழகத்தில் உள்ள கொரோனா பாதிப்பு தான் இருந்தது. அதனால் தற்போதைக்கு கட்டாய பரிசோதனைகள் பரவலாக தேவையில்லை. அதேபோல் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் உள் நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை தேவை இல்லை. ஒரு வேளை அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்வது அவசியம் என அவர் கூறியுள்ளார்.