இயற்கையின் விசித்திர படைப்புகளில் ஒன்றான ‘நேக்கட் மோல் ரேட்’ (Naked mole-rat) என்ற முடியில்லா எலி இனம், தங்களது அசாத்தியமான சூப்பர் ஹீரோ குணங்களால் தற்பொழுது உலக விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

சாதாரண எலிகள் 2 முதல் 3 ஆண்டுகள் மட்டுமே வாழும் நிலையில், இந்த எலிகள் 30 முதல் 32 ஆண்டுகள் வரை எவ்வித முதுமைத் தோற்றமும், உடல் பலவீனமும் இன்றி தனது இறுதி நாள் வரை இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழ்கின்றன. இவற்றுக்கு உடலில் வலி சிக்னல்களை மூளைக்கு அனுப்பும் வேதிப்பொருள் இல்லாததால், வெட்டுக்காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது ஆசிட் பட்டாலோ எவ்வித வலியும் தெரியாது.

 

View this post on Instagram

 

A post shared by Natxios (@natxios)

மேலும், ஆக்சிஜன் இல்லாத சூழலில் கூட சுமார் 18 நிமிடங்கள் வரை தாவரங்களைப் போல ஃபிரக்டோஸ் மூலம் ஆற்றலை உருவாக்கி இவற்றால் உயிர்வாழ முடியும். இவற்றுடைய உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட வகை சர்க்கரை சத்து, கேன்சர் செல்களை அண்டவிடாமல் தடுப்பதால் இந்த விலங்கினத்திற்கு கேன்சர் நோயே வராது என்பது மருத்துவ உலகிற்கு ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சிப் பொருளாக மாறியுள்ளது.

எறும்புகள் மற்றும் தேனீக்களைப் போல ஒரு ராணி எலியின் கட்டுப்பாட்டில் கூட்டமாக வாழும் இந்த விசித்திர எலிகள், சுரங்கம் தோண்டும்போது வாய் வழியே மண் போகாமல் இருக்க உதடுகளுக்கு வெளியே பற்களைக் கொண்டுள்ளன.

கண்கள் தெரியாத போதிலும் வாசனையையும், அதிர்வுகளையும் வைத்துத் துல்லியமாகப் பாதையைக் கண்டறியும் இந்த எலிகள், சுரங்கங்களுக்குள் எவ்வளவு வேகமாக முன்னோக்கி ஓடுமோ, அதே வேகத்தில் பின்னோக்கியும் ஓடும் அசாத்திய திறமை படைத்தவை.