மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அரசு பெண் அதிகாரி ஒருவரின் கார் சுமார் இரண்டு மணி நேரமாக என்ஜின் மற்றும் ஏசி அணைக்கப்படாமல் ஸ்டார்ட்டிங்கலேயே நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நகர்ப்புற மேம்பாட்டு முகமையின் திட்ட அதிகாரி சாஜிதா குரேஷி என்பவர் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற நிலையில், அவரின் சொகுசு கார் வெளியே வெயிலில் நின்றுகொண்டிருந்தது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் வாங்கிய எரிபொருள் இப்படி அநியாயத்திற்கு வீணடிக்கப்பட்டது அங்கிருந்தவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ​இதுகுறித்து காரின் டிரைவரிடம் அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தபடி கேட்டபோது, “வெளியே வெயில் அதிகமாக இருக்கிறது, அதிகாரி எப்போது வேண்டுமானாலும் வெளியே வருவார், அவர் காரில் ஏறும்போது குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஏசியை ஆன் செய்து வைத்துள்ளேன்” என கூலாகப் பதிலளித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அரசு சொத்துக்கள் வீணடிக்கப்படுவது குறித்து பலத்த விவாதங்களை கிளப்பிய நிலையில், “டிரைவர் காரை இப்படி ஆன் செய்து வைத்திருந்தது எனக்குத் தெரியாது, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி மழுப்பலாகப் பதிலளித்துள்ளார்.