பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1992-ல் நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில், தற்போது 84 வயதான தீப் ராய் என்ற முதியவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி ஜெயிலுக்கு அனுப்பியுள்ள விசித்திர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராகவ்பூர் கிராமத்தில் வசிப்பவர் வீட்டு வாசலில் கண்ணாடித் துண்டுகளை சிதறடித்ததாக எழுந்த பஞ்சாயத்து, பின்னர் பெரிய சண்டையாக மாறி கொலை முயற்சி வழக்காகப் பதிவானது. இந்த வழக்கில் 1993-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், நீதிமன்றத்தில் வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்து, சுமார் 33 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நெடிய விசாரணைக்குப் பிறகு, கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் முதியவர் தீப் ராயைக் குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணைக் காலத்திலேயே இதர 4 குற்றவாளிகள் இறந்துவிட்ட நிலையில், தற்போது 84 வயதில் சரியாக நடக்கக்கூட முடியாமல் இரண்டு பேரின் உதவியோடு தடியூன்றி சிறைக்குச் செல்லும் இந்த தாத்தாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. “தண்டனை கொடுப்பதில் இவ்வளவு காலதாமதமா?” என நெட்டிசன்கள் இந்திய நீதித்துறையின் தாமதத்தை நோக்கி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
