இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 15 வயதிலேயே ஐபிஎல் போட்டிகளில் அசத்திய இவருக்கு, தற்போது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவரது திறமையைக் கண்டு பலரும் பாராட்டி வரும் வேளையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்வீர் அகமது, வைபவ்வின் திறமை மற்றும் வயது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்திய ஆடுகளங்களில் ரன் எடுப்பது எளிது என்றும், உண்மையான திறமை இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு மண்ணில்தான் தெரியும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
வைபவ்வின் வயது குறித்துத் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வரும் தன்வீர் அகமது, அவர் 15 வயதுடையவர் தானா என்பதை வெளிநாடுகளில் முறையாகப் பரிசோதிக்க வேண்டும் என்றும், ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் சேனல் கூட இவரது வயது குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஓய்வுக்குப் பிறகு தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் தன்வீர், வைபவ் விஷயத்திலும் இதுபோன்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற விமர்சனங்களைத் தாண்டி, தனது ஆட்டத்தின் மூலம் வைபவ் விரைவில் சர்வதேச அளவில் தகுதியை நிரூபிப்பார் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
