2023 ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய முன்னணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது பிசிசிஐ..

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதையடுத்து, வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும், நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, உடல் தகுதி இல்லாமல் பல வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் நேற்று பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமண், சேத்தன் சர்மா பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி அடிக்கடி காயங்களால் அவதிப்படும் வீரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் 20 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியலையும் தயார் செய்துள்ளது. இந்த 20 பேருக்கும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் 2023 இன் போது இந்தியாவின் முக்கிய வீரர்களின் உடற்திறன், மன அழுத்தம், பணிச்சுமைகள், குறிப்பாக காயங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஐபிஎல் உரிமையாளர்களுடன், பிசிசிஐயின் தேசிய கிரிக்கெட் அகாடமியும் “இணைந்து” கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் கண்காணிக்கப்பட்டு அதற்கேற்றாற்போல் திட்டங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த அக்டோபர் மற்றும் நவம்பரில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கு வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதற்கான பிசிசிஐயின் புதிய கொள்கையாக இது உள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் காரணமாக சில மூத்த வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக பும்ரா மற்றும் முகமது ஷமி போன்ற வீரர்கள் டெஸ்ட் அணியில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால் அதனைத்தொடர்ந்து நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜொலிக்க முடியாது. இதனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி தொடர்ந்து 14 போட்டிகளில் விளையாட வேண்டாம், முக்கியத்துவம் இல்லாத போட்டியில் ஓய்வு எடுக்க வேண்டும்.இல்லையெனில், ஐபிஎல் போட்டியில் இருந்து ஒட்டு மொத்தமாக விலகி, உடல் தகுதியை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதேபோல், இந்திய கிரிக்கெட் அணிக்கு தகுதி பெற வேண்டுமானால், யோயோ உடல் தகுதி தேர்வு மற்றும் டெக்ஸா ஸ்கேன் போன்ற சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. யோ-யோ டெஸ்டில் தோல்வியடையும் வீரர்களுக்கு இனி இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காது என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் பல்வேறு மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் இந்திய அணிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.