பிரபல உணவுப் பொருள் டெலிவரி நிறுவனமான Zepto-வின் டெலிவரி எஜெண்ட் ஒருவரின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த  ஜூலை 12 ஆம் தேதி மாலை 4:52 மணியளவில், ஒரு குடியிருப்பு வளாக லிப்டில் நிகழ்ந்த இந்த சம்பவம், அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அ ந்த வீடியோவில், இரண்டு பேர் ஒரு Zepto ஆர்டரில் உள்ள செர்ரி பழங்களை பெட்டியை திறந்து, அதிலிருந்தே சாப்பிட்டு, அதன் விதைகளை லிப்டின் தரையில் துப்புவதைப் பார்க்க முடிகிறது.

இதனைப் பார்த்து அதே குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், இது குறித்து Zepto ஆப்பில் புகார் அளிக்க முயன்றபோது, அது சரியாக செயல்படவில்லை என்றும், வீடியோ பதிவேற்ற முயற்சியில் செயலி தொடர்ந்து முடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை LinkedIn-ல் பகிர்ந்துள்ள ஜிதேன் அகர்வால் என்பவர், “நேற்று மாலை நாங்கள் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை கண்டோம். Zepto டெலிவரி எஜெண்ட் ஒருவர், எங்கள் ஆர்டரில் வந்த செர்ரிகளை லிப்டிலேயே சாப்பிட்டு, விதைகளை தரையில் எறிந்துள்ளார்.

இது மிகவும் அசிங்கமான மற்றும் நம்பிக்கையை சீரழிக்கும் செயல். எப்போதும் நாங்கள் வசதிக்காகவே இந்த சேவையை தேர்வு செய்கிறோம். ஆனால், இது பாதுகாப்பும் மரியாதையும் இல்லாமல் செயல் பட்டதைக் காட்டுகிறது,” என பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் உணவு மற்றும் டெலிவரி துறையின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் என வாடிக்கையாளர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். Zepto நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.