தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் சினிமா பட பாணியில் ஒரு ஹைடெக் மோசடி கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். மஞ்சிரியால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கரீம்நகரில் வசித்து வந்தனர். கணவர் இன்டீரியர் டிசைனர், மனைவி ஒரு பிரபலமான யூடியூபர். பண நெருக்கடியில் இருந்த இவர்கள் குறுக்கு வழியில் கோடீஸ்வரர்களாக ஒரு தந்திரமான திட்டத்தைப் போட்டனர்.
சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு ஆண்களை மனைவி வளைப்பார். அதில் சிக்கும் ஃபாலோவர்களுக்கு ‘தனிமையில் நேரத்தைச் செலவிடலாம்’ என பம்பர் ஆஃபர் கொடுத்து நேரில் வரவழைப்பார்.
மனைவி ஃபாலோவர்களுடன் தனிமையில் இருக்கும்போது, கணவர் அவற்றை ரகசியமாக வீடியோ எடுப்பார். பின்னர் அந்த வீடியோக்களைக் காட்டி, “பணம் தராவிட்டால் இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம்” என மிரட்டி பல கோடிகளை வசூல் செய்துள்ளனர். இவர்களிடம் சிக்கி மானத்திற்குப் பயந்து பல அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டியுள்ளனர்.
சமீபத்தில் தங்களுக்குத் தெரிந்த ஒரு நபரையே மிரட்டி 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் களமிறங்கிய போலீசார், தம்பதியினரைக் கைது செய்து, அவர்களிடம் இருந்த நிர்வாண வீடியோக்கள் மற்றும் 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்தனர்.
