இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் அழகு சாதனப் பொருட்கள் குறித்த மதிப்பாய்வு (Review) வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு இளம் பெண் தனது தந்தையிடம் விலையுயர்ந்த மாய்ஸ்சரைசர் குறித்துப் பேசிய வீடியோ, தற்போது இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ள ஒரு மாய்ஸ்சரைசரை அந்தப் பெண் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அதன் விலை 5,800 ரூபாய் என்று அவர் தனது தந்தையிடம் கூற, அதைக் கேட்டு அவர் நிலைகுலைந்து போனார். “இவ்வளவு பணத்தை வீணடிக்கிறாயே?” என்று தனது மனைவியிடம் (பெண்ணின் தாய்) அவர் புகார் செய்யும் காட்சி அப்படியே ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தின் சூழலைப் பிரதிபலிக்கிறது.

தனது தந்தையின் கோபத்தைச் சமாளிக்க அந்தப் பெண் ஒரு வேடிக்கையான பொய்யைச் சொன்னார். “இந்த மாய்ஸ்சரைசரில் பூனையின் மலம் சேர்க்கப்பட்டுள்ளது, அதனால்தான் இது இவ்வளவு விலை” என்று அவர் நகைச்சுவையாகக் கூற, தந்தை மேலும் அதிர்ச்சியடைந்தார்.

அதன் வாசனையை நுகர்ந்து பார்க்க மகள் அழைக்க, “கொஞ்ச நாளைக்கு என்னிடம் வராதே, தள்ளியே இரு” என்று அந்தத் தந்தை மிரட்சியுடன் கூறும் எதிர்வினை (Reaction) நெட்டிசன்களைச் சிரிக்க வைத்துள்ளது

@Taza_Tamacha என்ற எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, ஆயிரக்கணக்கான பார்வைகளையும் கருத்துகளையும் குவித்து வருகிறது. “எங்கள் வீட்டிலும் இதே கதைதான்” என்று பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். விலையுயர்ந்த நாகரீக மோகத்திற்கும், நடுத்தர வர்க்கத் தந்தையின் சிக்கனத்திற்கும் இடையிலான இந்த ‘பாசப் போராட்டம்’ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில்  உள்ளது.