
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆயிரம்விளக்கு பகுதியில் பிரியங்கா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிண்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரியங்கா தனது பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணன் ரிஷிநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இருவரும் ஜூஸ் குடிப்பதற்காக ஜாம்பஜார் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ராயப்பேட்டை மேம்பாலத்தில் வைத்து முன்னால் சென்ற மாநகர பேருந்தை ரிஷிநாதன் முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.
அப்போது எதிர் திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ரிஷிநாதனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரியங்கா பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரிஷிநாதன் தனது தங்கையை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.