கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரான இளந்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இமயவர்மன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இளந்தமிழனும், இமயவர்மனும் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகளுடன் எங்களுக்கு பழக்கம் இருக்கிறது. பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவோம் என கூறினார்கள். இதனை நம்பி அதே பகுதியில் வசிக்கும் ராமானுஜம் என்பவர் தனது தெரிந்த 6 பேருக்கு வேலை வாங்கி தருவதற்காக அவர்களுக்கு 12 1/2 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை வாங்கி கொண்ட இளந்தமிழன், கொள்ளிடம் பகுதியை சேர்ந்த அருண்குமார், அவரது மனைவி அஜந்தா ஆகியோர் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதில் அருண்குமார் சென்னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் அலுவலக உதவியாளராகவும், அஜந்தா சென்னை எழிலகத்தில் இருக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கூறியபடி அவர்கள் வேலை வாங்கி கொடுக்காததால் ராமானுஜம் தரப்பினர் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ராமானுஜம் உட்பட பலரிடம் இருந்து அவர்கள் 4 பேரும் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அஜந்தா, இளந்தமிழன், இமயவர்மன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அருண்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.