தமிழகத்தில் ஹிந்தி பேசும் மக்களுக்கு எதிராக நேரடியாகவே வெறுப்புணர்வை தூண்டுகிறார்கள். இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரஷாந்த் கிஷோர் சீமானின் வீடியோவை பகிர்ந்து கேள்வி எழுப்பி இருந்தார். இதனையடுத்து சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் என்எல்சி விரிவாக்க பணிகளுக்கு எதிராக சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய சீமான், இந்தியா முழுமைக்கும் என்னை அறிமுகப்படுத்தி வைத்த பிரசாந்த் கிஷோருக்கு நன்றி என்று கூறினார். பிரசாந்த் கிஷோர் பீகார் நாட்டைச் சேர்ந்தவர்.

அதனால்தான் பீகாரை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக பேசினார். நான் தமிழன். எனவே நான் தமிழர்களுக்கு ஆதரவாக தான் பேசுவேன். நான் மிரட்டலுக்கு எல்லாம் பணிகின்ற ஆள் கிடையாது. நான் வட மாநில தொழிலாளர்களை பற்றி சர்ச்சையாகபேசவில்லை. இங்கு வரும் வட மாநில தொழிலாளர்கள் எங்கு தங்குவார்கள் எத்தனை நாட்கள் இருப்பார்கள் எங்கு வேலை பார்க்கிறார்கள் போன்றவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தான் கூறினேன். அவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நம் சிறுமியை வன்புணர்வு செய்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். அதற்கு யாரும் ஐயோ பாவம் என்று சொல்லவில்லை.

இன்று தொழிலாளர்களாக வருபவர்கள் நாளை முதலாளிகளாக மாறிவிடுவார்கள். நாம் வேலையை இழந்து விடுவோம். இது பல இடங்களில் நடந்திருக்கிறது. கர்நாடகா, ஆந்திரா தமிழர்கள் மீது கை வைத்து விடுவார்கள் என்று மிரட்டுகிறார்கள். நீ தொட்டால் நானும் தொடுவேன். மேலும் 400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு திமுகவுக்காக வேலை செய்தவர் இன்று 4 ரூபாய் கூட வாங்காமல் என்னை இந்தியா முழுவதும் ஒரே நாளில் தெரியப்படுத்திய பிரசாந்த் கிஷோருக்கு கண்டிப்பாக நன்றி சொல்லி தான் ஆக வேண்டும் என்றார்.